தற்போதைய செய்திகள்


யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகினர்.

இன்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேருந்துக்கு பிரதேசவாசிகள் தீ வைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார். 

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களை நேற்று (22) சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“சஜித் பிரேமதாச என்னைச் சந்தித்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனித்து போட்டியிட வேண்டாமெனவும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அதற்குப் பதிலளித்த நான், எமது கட்சி சில மாவட்டங்களில் உங்கள் தலைமையிலான கூட்டமைப்பிலும், சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடும் எனத் தெரிவித்தேன். 

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு நாங்கள் செயல்பட முடிவு செய்துள்ளோமென தெரிவித்தேன். இதுதான் உண்மை. எனினும், என்னையும் எனது கட்சியையும் எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்று அலைந்து திரிகின்ற இனவாத ஊடகங்கள், இந்த விடயத்தை திரிபுபடுத்தி, பொய்களைப் புனைந்து வதந்திகளை பரப்பியுள்ளன. அந்த ஊடகங்களின் செய்திகளில் இந்தப் புரளிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் மக்கள் காங்கிரஸின் வகிபாகம் என்னவென்பதிலும், அக்கட்சியின் முக்கியத்துவம் எந்தளவென்பதிலும் சஜித் பிரேமதாசவுக்கு தெளிவான விளக்கம் உண்டு. 

புத்தளத்தில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அகதி முகாம்கள் இன்று கிராமங்களாகவும், மாதிரிக் கிராமங்களாகவும் காட்சி தருவதற்கு, வன்னி சமூகம் நமக்குப் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரமே பிரதான காரணம்.

வடக்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து புத்தளம் வந்தபோது, நமது பூர்வீகக் கிராமங்கள் இருந்த நிலையிலும் ஒருபடி மேலாக, புத்தளத்தின் பல அகதி கிராமங்கள் வளர்ச்சி கண்டன என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. உறுதி இல்லாத காணிகளில் கொட்டில்களை அமைத்திருந்தோம். மின்சாரமும் குடிநீரும் இல்லாத வாழ்க்கையும் நமக்கு அப்போது இருந்தது. இடநெருக்கடியுடன் பாடசாலைக் கல்விக்காக ஏங்கித்தவித்த மாணவர்களுக்கும் சுகாதார வசதிக் குறைபாட்டுடன் இருந்தவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். 

எனினும், வடக்கில் அமைதி ஏற்பட்டு சமாதானம் பிறந்த பிறகு, எமது மண்ணில் மீளக்குடியேறும் தார்மீகத் தேவை நமக்கு இருந்தது. சொந்த மண்ணில் வாழக்கூடாதென்றே எம்மை விரட்டியடித்தனர். 

எனவேதான் அதற்கு மாற்றமாக, சவால்களுக்கும் தடைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், மீண்டும் நமது தாயக மண்ணில் கால் பதித்தோம். விரட்டியவர்களின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்தோம். துரத்தப்பட்ட நோக்கத்தை தகர்த்தோம். வேரொடு பிடுங்கப்பட்டு விரட்டப்பட்ட நாம், மீண்டும் குடியேறுவதில் வெற்றிகண்டோம். 

வன்னிப் பிரதேசத்தில் அபிவிருத்தியில் கூடிய கரிசனை செலுத்தியதனால்தான், இந்தப் பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எதிர்வரும் காலங்களில் இவற்றிலும் கூடியகவனம் செலுத்துவோம். 

எமக்கு ஆதரவான வன்னி மாவட்ட சிறுபான்மை சமூகத்தை பிரிக்கவும், விலைகொடுத்து வாங்கவும், அவர்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தவும் ஒரு கூட்டம் திரிகின்றது. இதன்மூலம் எம்மைத் தோற்கடிப்பதும், பழிவாங்குவதும், எமது அதிகாரத்தை பிடுங்குவதும் அதன்மூலம், தாம் நினைத்தவற்றை எல்லாம் சாதிப்பதுமே இவர்களின் இலக்காகும்” என்றார்.

சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

அந்தவகையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமான ஹுபெய் மாகாணத்திலுள்ள சிறைச்சாலைகளில் 271 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 கைதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதேவேளை, ஜெஜியாங் மாகாணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹுபெய் மாகாணத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளங்குற்றவாளி ஒருவருக்கும் வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் பாதிப்புக்குள்ளான கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் கொரோனா வேகமாக பரவியதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் கவனக்குறைவாக இருந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அங்கொட தொற்று நோய் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றும் ஒருவர் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம், இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் 5 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் கலைப்பதனால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாகும் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நல்ல நேரம் என்பதனால் அன்றைய தினத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 11 - 17ஆம் திகதியில் பொது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றம் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால் அதனை பெற்றுக்கொள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆயுட்காலத்திற்கு முன்னர் கலைக்கப்படுவதால் 60 உறுப்பினர்கள் பெரும் கவலையில் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அமுல்படுத்தப்படும் நீர் விநியோக தடை உட்பட பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தீர்க்க குறுந்தகவல் சேவையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

இந்த குறுந்தகவல் சேவையை பெற்றுக் கொள்வதற்காக வாடிக்கையாளரின் நீர் பட்டியல் இலக்கத்தை 071 939 99 99 என்ற இலகத்திற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்ப வேண்டும்.

இந்த குறுந்தகவல் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்த நீர் கட்டணம், செலுத்த வேண்டிய மீதிப்பணம், நீர் கட்டணம் செலுத்தாமையினால் நீர் துண்டிக்கப்படும் நாள் மற்றும் திடீர் நீர் விநியோகத் தடை தொடர்பில் தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த குறுந்தகவல் சேவையை இலவசமாக செயற்படுத்துவதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.